எந்த பயங்கரவாத செயலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்...... கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள்.....
காஷ்மீரில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் துமகூருவில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதாவது துமகூரு டவுனில் மதீனா மசூதி உள்ளது. இங்கு நேற்று மதியம் தொழுகை முடித்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மசூதி முன்பு, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மதீனா மசூதி தலைவர் முகமது தஸ்தகீர் பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறார்கள். அதுபோல் நாங்களும் அந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்தியா தான் எங்களின் தாய்நாடு. எங்கள் தாய்நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பயங்கரவாத செயலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மசூதி துணைத் தலைவர் சைபுல்லா கூறுகையில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரான கொடிய செயல். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் நமது நாட்டில் ஒற்றுமையாக வாழ்கிறோம். பயங்கரவாத செயலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் பேசுகையில், நிராயுதபாணியான மக்கள் காஷ்மீரில் தாக்கப்பட்டு உள்ளனர். எங்கள் மதம் யாரையும் கொல்ல அனுமதிக்கவில்லை. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த கொடூர செயலை செய்த பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
No comments