• Breaking News

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்...... திட்டமிட்டபடி சாதித்து காட்டிய இந்து சமய அறநிலையத்துறை.....

     


    தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று (ஏப்ரல் 07) காலை கோலாகலமாக நடந்தது.

    வடக்கே காசி தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்றாக உள்ள தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து 5 மணிக்கு விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடைபெற்றது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடந்து மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


    முன்னதாக தென்காசி ரெயில் நகரை சேர்ந்த நம்பிராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்து இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை என கூறி கும்பாபிஷேகம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடைவிதித்து இருந்தது. ஆனால் தமிழக அரசின் முயற்சியால்  04-04-2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. கோவில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் ஆய்வு செய்ய தேவையில்லை. குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம். கணபதி ஹோமம் முடிந்த பின்னர் குடமுழுக்கை நிறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கம் செய்ய வேண்டும் என வாதாடினார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். இந்நிலையில் திட்டமிட்டபடி கும்பாபிஷேகத்தை நடத்தி சாதித்து காட்டியது இந்து சமய அறநிலையத்துறை.

    No comments