• Breaking News

    தென்காசி: டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை

     


    தென்காசி மாவட்டம் புளியங்குடி நவாச்சாலையில் ஊருக்கு வெளியே வயல்வெளி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள், கடையில் இருந்த விலை உயர்ந்த ரக மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். பணத்தை கடை ஊழியர்கள், பாதுகாப்பு கருதி தங்கள் பொறுப்பில் எடுத்துச்சென்றதால் அந்த பணம் தப்பியது.

    மேலும், கொள்ளையர்கள் தங்களை அடையாளம் காண முடியாத அளவில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    நேற்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது டாஸ்மாக் கடையில் கதவு திறந்து கிடந்ததை பார்த்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கடைக்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த துணிகர கொள்ளை குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    No comments