தஞ்சை: போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம்..... காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
தஞ்சாவூரை அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ்(வயது 32) என்ற மகனும், துர்க்கா, மேனகா(31), கீர்த்திகா(29) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் துர்க்காவுக்கு திருமணமாகி விட்டது. என்ஜினீயரிங் பட்டதாரியான கீர்த்திகா அரசு பணி தேர்வுக்காக படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை தினேசின் மாமா இறந்து விட்டார். இதனால் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் தினேஷ் உறவினர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு வழக்கு விசாரணைக்காக வர வேண்டும் எனக்கூறி தினேசை மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
சப்-இன்ஸ்பெக்டரை பின் தொடர்ந்து தினேசின் உறவினர்களும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது மேனகா, கீர்த்திகா ஆகியோர் தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் அவரை உடனடியாக விட வேண்டும். நாளை (அதாவது நேற்று) மேனகாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வர இருப்பதாகவும் கூறினர்.
ஆனால் தினேஷ் மீது பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ததாக கூறியதுடன் மேனகா, கீர்த்திகா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இருவரும் வீட்டிற்கு சென்று எள் பயிருக்கு தெளிக்க வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) எடுத்து வந்து நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு வைத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதனையடுத்து சகோதரிகள் இருவரையும் உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
No comments