• Breaking News

    சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்....சீமான் கண்டனம்

     


    நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை தொகுதி வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் செந்தில்வேல் அவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய கொடூரர்களுக்கு கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் பாசறைச் செயலாளரும், சமூக ஆர்வலருமான பச்சேரி மீனாட்சிபுரம் கிராமத்தைச்சேர்ந்த அன்புத்தம்பி செந்தில்வேல் அவர்கள் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதலை நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் நிகழும் மணல் கடத்தலைத் தடுக்க தொடர்ச்சியாகப் பல்வேறு அறப்போராட்டங்களை தம்பி செந்தில்வேல் முன்னெடுத்து வந்த நிலையில், ஏற்கனவே கடத்தல்காரர்களால் மிரட்டி அச்சுறுத்தப்பட்டு வந்துள்ளார்.

     தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்தும், மிரட்டிய மணற்கொள்ளையர்கள் மீதும் அளிக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக தற்போது அவர்மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட முதன்மை காரணமாகும்.திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவிட்டதற்கு, நாள்தோறும் நடைபெறும் சமூக ஆர்வலர்கள் மீதான கொலைவெறித்தாக்குதலே தக்கச் சான்றாகும். கட்டுக்கடங்காது நடந்தேறும் இக்கொடுமைகள் அனைத்திற்கும் மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    ஆகவே, சிவகங்கை மாவட்டம் பச்சேரி மீனாட்சிபுரத்தைச்சேர்ந்த அன்புத்தம்பி வழக்கறிஞர் செந்தில்வேல் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

    No comments