பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகி

 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி புஷ்பா(வயது 37). இவர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையில் பணியில் இருந்தார். அப்போது விழமங்கலம் ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சீனுவாசன்(48) என்பவர் தனது மோட்டார் சைக்கிளுடன் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.

அங்கு அவர் கூறியபடி மோட்டார் சைக்கிளுக்கு ரூ.50-க்கு புஷ்பா பெட்ரோல் போட்டார். இதனை தொடர்ந்து புஷ்பா, பெட்ரோல் போட்டதற்காக ரூ.50 தருமாறு கேட்டார். அதற்கு சீனுவாசன், பங்க் மேலாளர் என்னிடம் பணம் கேட்கட்டும். நீ ஏன் என்னிடம் பணம் கேட்கிறாய் என்று கூறி தகராறு செய்தார். மேலும் அவர் ஆபாசமாக திட்டி புஷ்பாவின் கன்னத்தில் அறைந்தார்.

இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் அப்துல்சமது, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனுவாசனை கைது செய்தனர். கைதான சீனுவாசன், திமுக முன்னாள் கவுன்சிலர் பழனியின் மகன் என்பதும், அவர் தற்போது திமுக நகர இளைஞரணி துணைச் செயலாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments