போலீஸ்காரரின் தாயை கொன்று நகையை திருடிய இளம்பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி வசந்தா (வயது 70). ஜெயபால் இறந்துவிட்டதால் வசந்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன் விக்ராந்த் என்பவர் நாசரேத் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். வசந்தா தினமும் காலை, மாலை நேரங்களில் வீட்டிற்கு வெளியே அக்கம்பக்கத்தினருடன் பேசி வருவது வழக்கம்.
நேற்று மாலையில் வெகு நேரம் ஆகியும் வசந்தா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. உடனே பின்வழியாக சென்றனர். அங்குள்ள கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வசந்தா இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக மெஞ்ஞானபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வசந்தா உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் கழுத்து, காதில் நகை அணிந்து இருந்ததாகவும், அந்த நகை மாயமாகி இருந்தது.
எனவே, வீட்டில் வசந்தா தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர்கள் உள்ளே புகுந்து அவரை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், போலீஸ்காரர் விக்ராந்த் தாயார் கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் செல்வரதியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 8 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வரதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments