பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கக் கூடாது..... முட்டு கொடுக்கும் விசிக தலைவர் திருமாவளவன்.?
பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு என்று கூறி, பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
பெரியார், அம்பேத்கர் சிலைகள் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சிக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு அனைவரும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் சாதி, மதங்களின் பெயரால் பகையை வளர்த்து, ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவாரங்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.370-வது சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு-காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என்று பாஜக அரசு திரும்பத் திரும்பக் கூறி, அங்கு சுற்றுலா செல்லலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. அதை நம்பி அங்கு சுற்றுலா சென்ற மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதுபோல, காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறுவது ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. அரசியல் ஆதாயம் இல்லை.காஷ்மீரில் நடந்த தாக்குதல் இரு நாடுகளிடையேயான போராக மாறிவிடக் கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு என்று கூறி, பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக்கூடாது. நமது வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக் கூடாது. அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணைபோனால், அதை உலக அளவில் அம்பலப்படுத்தி அந்நியப்படுத்த வேண்டுமே தவிர, யுத்தம் தேவையில்லாதது. பயங்கரவாதிகள் சாதி, மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். இது இந்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது.
வக்பு சட்டத்தைக் கண்டித்து மே 31-ம் தேதி திருச்சியில் விசிக சார்பில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, தமிழக அரசுக்கும், துணைவேந்தர்களுக்கும் திட்டமிட்டு நெருக்கடியை உருவாக்கினார். ஆனால், துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்து உள்ளார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் அவர் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments