கர்நாடக மாநிலம், மைசூரு குஷால் நகரின் பசவனஹள்ளியை சேர்ந்தவர்கள் சுரேஷ் - மல்லிகே தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாகின்றன. இரு குழந்தைகள் உள்ளனர். 2020ம் ஆண்டு நவம்பரில் திடீரென மல்லிகேயை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் அவரது கணவர் புகார் செய்தார்.
ஏழு மாதங்களுக்கு பின், பெட்டதபுரா பகுதியில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்தது. அது மல்லிகே தான் என கூறும்படி போலீசார் சுரேஷை மிரட்டியுள்ளனர். மனைவியை கொன்றதாக மிரட்டி வாக்குமூலம் வாங்கி, அவரை சிறையில் அடைத்தனர்.மரபணு அறிக்கையில், கண்டுபிடிக்கப்பட்டது சுரேஷ் மனைவியின் எலும்புக்கூடு அல்ல என்பது தெரியவந்தது. ஆனாலும், சுரேஷ் ஐந்தாண்டுகள் சிறையில் இருந்தார். இதற்கிடையே சுரேஷுக்கு ஜாமின் கிடைத்தது. கடந்த ஏப்., 1ம் தேதி, நண்பர்களுடன் மடிகேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுரேஷ், டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது தொலைவில் ஒரு பெண்ணை பார்த்தார்.
தெரிந்த முகமாக தோன்றவே, அருகில் சென்று பார்த்தபோது, தன் மனைவி மல்லிகே என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் விசாரித்த போது, தனது கள்ளக்காதலனுடன் விராஜ்பேட்டையில் உள்ள ஷெட்டிகெரேயில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருவதாக மல்லிகே தெரிவித்தார்.
இதன்பின் அவரை மைசூரு ஐந்தாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். 'இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மல்லிகேவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவத்தால், ஒரு தவறும் செய்யாமல், சுரேஷ் நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்தது தெரியவந்துள்ளது.
0 Comments