அன்புமணியின் தலைவர் பதவி பறிப்புக்கு காரணம் அமித்ஷா தமிழகம் வருகையா..?
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "பா.ம.க.வின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். பா.ம.க. தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை சொல்ல முடியாது" என்று அவர் கூறினார்.
கட்சி சார்ந்த பல்வேறு முடிவுகளை எடுப்பதில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வந்தது. பா.ம.க.வை பொறுத்தவரையில் தேர்தல் கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாசுக்குதான் உண்டு. ஆனால் கூட்டணி விவகாரத்தில் அன்புமணி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியா? பா.ஜனதா கூட்டணியா? என்பதில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனக்கசப்பை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, டாக்டர் அன்புமணி சந்திக்க உள்ளார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில்தான் தலைவர் பதவியை டாக்டர் ராமதாஸ் பறித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பா.ம.க.வை பொறுத்தவரையில் புதிய நிர்வாகிகள், அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டிதான் நியமிக்கப்படுவார்கள். அதேபோன்று, அந்த கட்சி சட்டத்திட்டத்தின்படி, தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவெடுப்பதற்கும், இந்த சிறப்பு பொதுக்குழுவுக்கே அதிகாரம் உண்டு என பா.ம.க. வட்டாரத்தில் கூறுகிறார்கள்.அந்த வகையில், அன்புமணி ராமதாசை, கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கியது செல்லாது என்றும், தேர்தல் கமிஷனில் அன்புமணி ராமதாசின் பெயர் இடம் பெற்றிருப்பதால், கட்சியில் அவருக்கே அதிகாரம் என்றும் பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்ச கட்டத்தை எட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments