• Breaking News

    பல கோடி ரூபாய் சொத்துக்களை எழுதி வாங்க மதுரை தொழிலதிபர் வெளி மாநிலத்துக்கு கடத்தல்

     


    சொத்தை எழுதி வாங்கும் திட்டத்தில் மதுரை தொழிலதிபர் வெளி மாநிலத்துக்குக் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    மதுரை பீபி குளத்தைச் சேர்ந்த சுந்தர், பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் கடை நடத்துகிறார். இவருக்கு மதுரை நகர் மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே பல கோடி மதிப்புள்ள இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் தொடர்பாக சுந்தருக்கும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் சுந்தருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.

    இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிலர், கடந்த 14-ம் தேதி பீபி.குளத்திலுள்ள சுந்தரின் வீட்டுக்குச் சென்று அவரை வெளியில் வைத்து பேசலாம் எனக் கூறி அழைத்துச் சென்றனர். இதன்பின், சுந்தர் வீடு திரும்பிவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றவர்கள் சுந்தரை காரில் கடத்திச் சென்றதாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.இது தொடர்பாக மதுரை, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கடத்தல் கும்பல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிசிடிவி காட்சியைக் கொண்டு காரின் பதிவெண் மூலம் சுந்தருக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர் உட்பட கடத்தலில் தொடர்புடைய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், சொத்தை எழுதி வாங்கும் நோக்கில் 6 பேர் கும்பல் சுந்தரை வெளி மாநிலத்துக்குக் கடத்தி இருப்பது தெரிய வந்தது. தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் ராஜேஸ்வரன் தலைமையில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், `திண்டுக்கல் சொத்து வழக்கில் சுந்தருக்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வந்த ஆத்திரத்தில் அவரை கடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட சொத்தை மிரட்டி எழுதி வாங்கும் முயற்சியில் இச்சம்பவம் நடந்திருப்பது தெரிகிறது. இன்னும், ஓரிரு நாளில் சுந்தரை மீட்டு அவரை கடத்தியவர்களைக் கைது செய்வோம்,’ என்றார்.இதற்கிடையே, கனடா நாட்டில் வசிக்கும் சுந்தரின் சகோதரி விசாலாட்சி வெளியிட்டுள்ள வீடியோவில், `கடத்தப்பட்டுள்ள எனது சகோதரரை மீட்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது நிலை குறித்து போலீஸார் வீடியோ வெளியிட வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    No comments