தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை விஜய் தலைமையில் நடைபெறுகிறது
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது ஆண்டு துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து, மாநில கட்சிகளுக்கு இணையாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டிகளை அமைக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் நிர்வாக பணிகளுக்காக அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் பூத் கமிட்டிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments