• Breaking News

    கவர்னருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..... முழு விவரம்

     


    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களை அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், குடியரசு தலைவருக்கு அனுப்புவதை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதாவது, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களும், கவர்னரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு வாசித்த தீர்ப்பு விவரம் வருமாறு:

    அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ், கவர்னருக்கு எந்த மாதிரியான முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது? அதில் வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தை தாண்டி வேறு மாதிரியான முடிவுகளை கவர்னர் எடுக்க முடியுமா?

    ஒருமுறை திருப்பி அனுப்பிய மசோதாவை மறுநிறைவேற்றம் செய்து ஒப்புதலுக்கு அனுப்பினால் அதனை குடியரசு தலைவர் முடிவுக்கு கவர்னர் அனுப்ப முடியுமா ? கவர்னருக்கு தன்னிச்சையான அதிகாரம் (வீட்டோ பவர்) உள்ளதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது

    கவர்னர் என்பவர் அமைச்சரவை ஆலோசனையின்படி நடக்கவேண்டுமா? இல்லை தன்னிச்சையாக அவரின் அதிகாரத்துக்குட்பட்டு முடிவு எடுக்கலாமா? நடக்கலாமா? மசோதாக்கள் மீது முடிவெடுக்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்யலாமா? எவ்வளவு கால நிர்ணயம் செய்ய முடியும்? அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் எடுக்கும் முடிவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா? என்பது உள்ளிட்ட கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. அதற்கு முடிவு காணும் வகையில் உத்தரவு பிறப்பிக்கிறோம்.

    சட்டமன்றம் இயற்றி முதல்முறையாக மசோதா அனுப்பினால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஒப்புதலை நிறுத்தி வைத்தார் என்றால் அவர் அரசியல் சாசனத்தின் பிரிவு 200-ன் முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையை வெகு விரைவாக பின்பற்ற வேண்டும் (திருப்பி சட்டமன்றத்துக்கு அனுப்பும் நிபந்தனை)

    மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அவர் பிரிவு 200-ல் வழங்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை,

    முழுமையான வீட்டோ அல்லது தன்னிச்சையான அதிகாரம் என்ற கருத்து அரசியலமைப்பில் கவர்னருக்கு வழங்கப்படவில்லை.

    அந்த வகையில் கவர்னர், மசோதா மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக வெறுமனே அறிவிக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஏனெனில் பிரிவு 200-ன் கீழ் முழுமையான தன்னிச்சை அதிகாரம் அனுமதிக்கப்படவில்லை.

    ஒரு மசோதா கவர்னரால் திருப்பி அனுப்பபட்டு அதன் பின்னர் சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கவர்னர் அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவர் முடிவுக்கென ஒதுக்க முடியாது.

    அதேவேளையில், இரண்டாவது முறையாக ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மசோதா ஏற்கனவே முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவை விட வேறுபட்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் விதிவிலக்காக கருத முடியும் (குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்காக நிறுத்தி வைக்கமுடியும்)

    எனவே சட்டமன்றம் இயற்றிய ஒரு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு செய்தால் அதனை ஒரு மாதத்துக்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும்

    மேலும் , மாநில அரசின் அதாவது அமைச்சரவை ஆலோசனைக்கு மாறாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்காக அனுப்ப நிறுத்தி வைத்தால், அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

    ஆனால் ஒரு பொதுவிதியாக, கவர்னர், ஒரு மாநில அரசின் அல்லது அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் செயல்பட வேண்டும். கவர்னர் தனது விருப்புரிமையை செயல்படுத்த முடியாது, அதற்கு அரசியலமைப்பு எந்த இடத்திலும் இடமளிக்கவில்லை.

    கவர்னர் என்பவர் மாநில சட்டமன்றத்தின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். அதாவது, அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ், கவர்னருக்கு எந்தவிதமான விருப்புரிமையும் இல்லை. அவர் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என மீண்டும் தெரிவிக்கிறோம்.

    அதேபோல எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அது அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு அதில் வழங்கப்பட்டுள்ள ஷரத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும்.

    தமிழக சட்டமன்றம் இயற்றிய 10 மசோதாக்களை கிடப்பில் போடப்பட்ட கவர்னர் செயல்பாடு சரியானது அல்ல. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் கவர்னரின் முடிவு என்பது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதே.

    மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு, மறுமுறை இயற்றி அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசு தலைவர் பரிசீலிக்காக ஒதுக்குவது என்பது சட்டவிரோதமானது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் நலத் திட்டங்களுக்காக செயல்படும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக கவர்னர் இருக்கக்கூடாது

    தமிழக சட்டமன்றம் இயற்றி, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்கள் அதன் பின்னர் குடியரசு தலைவருக்கு கவர்னரால் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அதன் மீது குடியரசு தலைவர் எடுக்கும் எந்தவொரு எதிர் முடிவுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு காலவரம்பின்றி தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு, 10 மசோதாக்களும் கவர்னருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என்று பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

    அந்தவகையில் 10 மசோதாக்களையும் உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி சட்டமாக்குகிறோம். கவர்னர் அலுவலகத்தின் மீது நன்மதிப்பை உச்சநீதிமன்றம் வைத்துள்ளது. ஆனால் கவர்னர் அரசியல் சாசனத்துக்குட்பட்டு நடக்க வேண்டும். அவர் ஒரு அரசின் ஆலோசகராக இணைந்து செயல்பட வேண்டும். சட்டமன்ற முடுவுகளுக்கு கவர்னர் மதிப்பு வழங்க வேண்டும்

    மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவுகளை எடுக்கத்தான் சட்டமன்றத்தில் இணைந்திருக்கிறார்கள். அவ்வாறு சட்டமன்றத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் மதிப்பளிக்க வேண்டும்.

    அரசியலமைப்புச் சட்டத்தின் உயர் பதவிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களால் வழிநடத்தப்பட வேண்டும்.

    அவ்வாறு இருக்கையில் முடிவுகளை எடுக்க அழைக்கப்படும்போது, கவர்னர் தற்காலிகமான கருத்தியல் அடிப்படையில் வழிநடக்கக்கூடாது. மாறாக அரசியலமைப்பின் விழுமியங்களின்படி வழிநடக்க வேண்டும். அவ்வாறு செயல்படவில்லையென்றால், அரசியலமைப்பின் அடிப்படைகளை சீர்குலைக்கிறார்கள் என்பதே பொருள்.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    No comments