இறந்த தம்பியின் உடலை பார்த்து அழுத அக்காவும் அதிர்ச்சியில் உயிரிழப்பு

 


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை சாமியாடிகளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மருதன் 49. வக்கீல் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏப்., 2ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். மருதன் இறந்ததை கேள்விப்பட்ட அவரது அக்கா புஷ்பம், தனது ஊரான நாடார்வேங்கைப்பட்டியில் இருந்து தம்பியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

தம்பியின் உடலின் மீது விழுந்து கதறி அழுத போது மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே அவரும் இறந்தார். மருதனுக்கு, 2 அண்ணன்களும், 2 அக்காக்களும் இருந்த நிலையில்,புஷ்பம் தான் அனைவருக்கும் மூத்தவர், மருதன் அனைவருக்கும் இளையவர். தந்தை கிருஷ்ணன் இறந்துபோது, மருதன் சிறியவர் என்பதால், அவரை சகோதரி புஷ்பம் பாசத்துடன் வளர்த்துள்ளார்.

அக்கா, தம்பி இருவரும் உண்மையான பாசமலர்களாகவே இருந்துள்ளனர். பாசத்தோடு வளர்த்த ஆருயிர் தம்பி இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத துக்கத்தில் புஷ்பமும் இறந்துள்ளார். இருவரது உடலையும் அவரவர் ஊர்களில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சாவிலும் பிரியாத மருதன், புஷ்பம் பாசமலர்களின் மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பத்தின் கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது ஒரு மகனுடன் அவர் வேங்கைப்பட்டியில் வசித்து வந்தார். மருதன், தனது மனைவி, 2 மகன், ஒரு மகளுடன் சாமியாடி களத்தில் வசித்து வந்தார்.

Post a Comment

0 Comments