சித்திரை முழுநிலவு மாநாடு..... அனைத்து சமூகங்களுக்குமான மாநாடு..... ராமதாஸ் அறிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
சித்திரை முழுநிலவு நாள் என்றாலே மாமல்லபுரத்து கடற்கரையும், அங்குள்ள மணல்களின் எண்ணிக்கையை விஞ்சும் அளவுக்கு கூடியிருக்கும் பாட்டாளி சொந்தங்களின் எண்ணிக்கையும் தான் எனக்கு நினைவுக்கு வரும்.
1988-ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் பு.தா. இளங்கோவன். அவருக்குப் பிறகு குருபரன், பு.தா.அருள்மொழி ஆகியோர் சித்திரை முழுநிலவு மாநாடுகளை சிறப்பாக நடத்தினார்கள்.
2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டை மாவீரன் குரு தலைமையேற்று நடத்தினார். அதன்பின் தேர்தல் ஆண்டுகள் தவிர, 2013 ஆம் ஆண்டு வரை 10 சித்திரை முழுநிலவு விழாக்களை மாவீரன் குரு தான் நடத்தினார். 1988-ஆம் ஆண்டு முதல் 2013 வரை நடைபெற்ற 20 சித்திரை முழுநிலவு மாநாடுகளில் சரிபாதி மாநாடுகளை தலைமையேற்று நடத்திய பெருமை அவருக்கு உண்டு.
அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ஆம் ஆண்டில் நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக மருத்துவர் அன்புமணியை நியமித்திருக்கிறேன்.மாமல்லபுரம் மாநாட்டுக்கான பணிகள் இப்போது தீவிரமடைந்திருக்கின்றன. பந்தல்கால் நடப்பட்டிருக்கிறது. மாநாட்டுப் பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதைப் பார்க்கும் போது என் மனதில் இதுவரை நடந்த சித்திரை முழுநிலவு நாள் கொண்டாட்டங்கள் குறித்த மலரும் நினைவுகள் தான் நிறைகின்றன.
அந்தக் கொண்டாட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவீரன் குரு எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்வார்... எங்கெல்லாம் சுற்றித் திரிவார்... ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டத்தை அன்பும், கண்டிப்பும் கலந்த தனது பார்வையால் எப்படியெல்லாம் கட்டுப்படுத்துவார் என்பது குறித்த நினைவுகள் தான் மனதிற்குள் வந்து வந்து செல்கின்றன.இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணமும், கிறித்தவர்களுக்கு ஜெருசலேம் பயணமும், இறை நம்பிக்கைக் கொண்ட இந்துக்களுக்கு காசி யாத்திரையும் புனிதமானவை. பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருநாள் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் கடற்கரை மணற்பரப்பில் கூடுவது தான் புனித யாத்திரை. இந்த ஒரு பயணம் கொடுக்கும் உற்சாகம் பாட்டாளிகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு சுறுசுறுப்பாக பணியாற்ற வகை செய்யும். பிறந்த நாள்.... திருமண நாள்.... வரிசையில் ஒவ்வொரு பாட்டாளியும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு நாள் சித்திரை முழுநிலவு நாள் தான்.
சித்திரை முழுநிலவு நாளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள் நமது சொந்தங்களை மகிழ வைக்கும்.
இதுவரை நடத்தப்பட்ட 20 மாநாடுகள் எவ்வாறு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடத்தப்பட்டனவோ, அதை விட 100 மடங்கு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் இந்த ஆண்டு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது கனவு ஆகும்.
அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் கிராமங்களில் தொடங்கி மாநிலம் வரை அனைத்து நிலைகளிலும் மாநாட்டுப் பணிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களில் இருந்தும் அணி அணியாய் வாகனங்கள் புறப்பட வேண்டும். எல்லா ஊர்களிலும் சுவர் விளம்பரங்களும், பதாகைகளும் விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும்.
சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இந்த மாநாட்டை வன்னியர் சங்கம் நடத்தினாலும் இது அனைத்து சமூகங்களுக்குமான மாநாடு; சமூகநீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.
இவை அனைத்தையும் விட மிகவும் முக்கியம.... மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும். பயணப் பாதையில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மாமல்லபுரம் மாநாட்டுத் திடலில் பாட்டாளிகளின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments