ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் நாராயணதாஸ். இவருடைய மனைவி ஹேமபிரியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள 'ஆப்டஸ்' என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதில் 3 மாத தவணையை அவர் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்த நிதி நிறுவனத்தின் சார்பில் 4 பேர் கொண்ட குழுவினர் 3 நாட்களாக நாராயணதாஸ் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு கடன் தவணையை செலுத்த கூறி தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் வீட்டில் தனியாக இருந்த ஹேமபிரியா தனது கணவரும், மகன்களும் வெளியே சென்றுவிட்டனர். அவர்கள் வந்த பிறகு கடன் தொகையை கட்ட ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். நிதி நிறுவனத்தினர் அதை ஏற்றுக்கொள்ளாமல் வீட்டு சுவற்றில் இந்த வீட்டின் பெயரில் கடன் உள்ளது. அதனால் ஏலம் விடப்படும் என்று எழுதினர்.
இதனால் ஹேமபிரியா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி மாலை 6 மணியளவில் மீண்டும் நாராயணதாஸ் வீட்டுக்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் ஹேமபிரியாவிடம் கடன் தொகையை உடனே செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதன் காரணமாக மனவேதனையடைந்த ஹேமபிரியா வீட்டுக்குள் சென்று, மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து நிதி நிறுவன ஊழியர்கள் முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் உடல் கருகிய அவர் அலறி துடித்துள்ளார்.அதைப்பார்த்த நிதி நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஹேமபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் காலை ஹேமபிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து ஹேமாபிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து ஹேமபிரியாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதற்கிடையே வீட்டுக்கடன் தவணையை கட்டச்சொல்லி ஹேமபிரியாவின் வீட்டுக்கு சென்று வற்புறுத்திய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நாராயணதாஸ் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
0 Comments