• Breaking News

    ராகுல் காந்திக்கு வரலாறு எதுவுமே தெரியவில்லை..... உச்சநீதிமன்றம் கண்டனம்

     


    இந்தியாவைப் பற்றிய வரலாறு, புவியியல் என எதுவுமே தெரியாமல், விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி தாறுமாறாக பேசுவதா என்று, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், அவருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.காங்., முன்னாள் தலைவரான ராகுல், கடந்த 2022ல் 'பாரத் ஜோடா யாத்திரை' சென்றபோது, மஹாராஷ்டிராவின் அகோலாவில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை, பிரிட்டிஷாரின் பணியாள் என்றும், அதற்காக பிரிட்டிஷாரிடம் இருந்து பென்ஷன் பெற்றார் என்றும் விமர்சித்தார்.

    இதையடுத்து, ராகுல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, உ.பி.,யை சேர்ந்த நிருபேந்திர பாண்டே வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அமர்வு முன் நேற்று நடந்தது. ராகுல் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அப்போது, ராகுலுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

    நீதிபதி தீபங்கர் தத்தா, 'இந்தியாவின் வரலாறு, புவியியல் பற்றி எதுவுமே தெரியாத நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி நீங்கள் இப்படி தாறுமாறாக பேசுவது சரியல்ல. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக, உங்களைப் போன்ற நிலையில் இருக்கும் ஒருவர், ஏன் இப்படி தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.

    நாட்டுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக இப்படி பேசக்கூடாது என்றும் நீதிபதிகள் ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    நீதிபதி தத்தா கூறுகையில், 'மீண்டும் ஒருமுறை ராகுல் இப்படி பேசினால், ஒப்புதல் அளிப்பது என்ற பேச்சுக்கே இடம் இன்றி, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும்' என்றும் வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.'நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நடத்தும் முறை இதுவல்ல. அவர்கள் நமக்கு சுதந்திரம் பெற்று கொடுத்துள்ளனர்.'மகாராஷ்டிராவில் சாவர்க்கர் கடவுளைப் போன்று வழிபடப்படும் நிலையில், ராகுல் அப்படி பேச வேண்டிய அவசியம் என்ன' என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 'பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், மோஸ்ட் ஒபிடியன்ட் சர்வன்ட் என்று ஆங்கிலத்தில் சாவர்க்கர் குறிப்பிட்டுள்ளதை ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

    இது பற்றியும் ராகுலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    'மகாத்மா காந்தி கூட பிரிட்டிஷருக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் உண்மையுள்ள பணியாள் என்று குறிப்பிட்டதை உங்கள் கட்சிக்காரர் அறிவாரா' என்று நீதிபதி கேட்டார்.

    'ராகுலின் பாட்டியான இந்திரா எழுதிய கடிதம் ஒன்றில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரர் என்று குறிப்பிட்டதை ராகுல் அறிவாரா' என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும் நீதிபதிகள் கூறியதாவது: அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி பொறுப்பற்ற முறையில் பேசுவதா? சுதந்திர போராட்ட தலைவர்களை இழிவு படுத்துவதை அனுமதிக்க முடியாது. காந்தியை பிரிட்டிஷாரின் வேலைக்காரர் என ராகுல் கூறுவாரா? நம்மால் ஏற்க முடியுமா? வரலாற்றை தெரிந்து கொள்ளாமல், இதுபோன்று இனிமேல் பேசக் கூடாது.

    கோல்கட்டாவில் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதும் சக நீதிபதிகள், தங்கள் கீழ்ப்படிதல் உள்ள ஊழியர் என்று குறிப்பிடுகின்றனர். அப்படி சொல்வதாலேயே, யாரும் வேலைக்காரர் ஆகிவிடுவதில்லை. நாளை இன்னொருவர் மகாத்மா காந்தி பிரிட்டிஷாரின் வேலைக்காரன் என்று கூற முற்படுவார். நீங்கள் இதுபோன்ற செயல்களைத் தான் ஊக்குவிக்கிறீர்கள் என்றும் நீதிபதி தீபங்கர் குறிப்பிட்டார்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கில் ராகுலுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு பற்றி விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம், 'ராகுல் சமூகத்தில் வெறுப்பையும் விரோதத்தையும் பரப்புவதாக' கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    No comments