• Breaking News

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்..... இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சி

     


    இந்தியாவின் தலைப் பகுதியாக இருக்கும் காஷ்மீர், சிறந்த சுற்றுலா தலமாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது.அதேநேரம் காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.

    அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

    மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் மத்திய மந்திரிசபை கூட்டம், அனைத்துக்கட்சி கூட்டம் என அடுத்தடுத்து பல்வேறு ஆலோசனைகள் மூலம் அடுத்தகட்ட நகர்வுகளை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய விமானப்படை நேற்று தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய செக்டாரில் ஒரு பரந்த பகுதியில் இந்த பயிற்சியும், ஒத்திகையும் நடந்துள்ளது. இந்த பயிற்சியில் சுகோய்-30 ரக விமானங்கள், ரபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதற்காக அரியானாவின் அம்பாலா மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா விமானப்படை தளங்களில் இருந்து 2 ரபேல் விமான படைப்பிரிவுகள் பயிற்சித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ரபேல் விமானங்கள் தரை இலக்குகளை துல்லியமாக தாக்குதல் உள்ளிட்ட சிக்கலான பணிகளை கச்சிதமாக செய்து முடிப்பவை ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இது வழக்கமான பயிற்சிதான் என்று தெரிவித்தனர்.

    No comments