• Breaking News

    விழுப்புரம்: ஐகோர்ட் உத்தரவின்படி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோயில் அகற்றம்


     உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த முத்துமாரியம்மன் கோயில் விழுப்புரத்தில் அகற்றப்பட்டது. விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் மின்வாரிய சாலையில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்றும் மற்றும் 43 வீடுகளும் அமைந்துள்ளன. இதன் அருகில் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.

    இதற்கிடையே, ஆக்கிரமிப்பு செய்து இங்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. மற்றும் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இந்த கோயிலால், எங்கள் தொழிற்சாலைக்கான வாகனம் செல்ல வழி இல்லாமல் பாதிக்கப்படுகிறோம் என்று தொழிற்சாலை நிர்வாகத்தினர் சில வருடங்களுக்கு முன் விழுப்புரம் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ஆனால், அதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து, கடந்த 2022-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2024-ம் ஆண்டில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது. அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி முத்துமாரியம்மன் கோயில் மற்றும் குடியிருப்புகளை அகற்றுவதற்காக நகராட்சி, பொதுப்பணி, வருவாய், காவல்துறை அலுவலர்கள் அப்பகுதிக்குச் சென்றனர்.அப்போது அங்கு குடியிருக்கும் மக்கள், ‘எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்; கோயிலை இடிக்கக்கூடாது’ என வலியுறுத்தினர். தொடர்ந்து தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து மார்ச் 31 ம் தேதி, விழுப்புரம் ஆட்சியர் அலுவககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு பாண்டி சாலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் வசிக்கும் 42 குடும்பங்களுக்கு திருப்பாச்சனூர் கிராமத்தில் வீடு கட்டிக் கொள்ளும் வகையில் வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் வழங்கினர். ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அப்போது அமைச்சர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை காலி செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சூழலில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று கோயிலை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையிலான அலுவலர்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இப்பணி நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய இப்பணி பிற்பகல் 1 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது.

    முன்னதாக கோயிலுக்குள் இருந்த 5 வெண்கல சிலைகள், இரு கற்சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகக் கட்டிடத்தில் வைக்கப்பட்டது.

    No comments