தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
துபாயில் இருந்து கடந்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி பெங்களூருவுக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் தெலுங்கு நடிகரான தருண் ராஜு மற்றும் பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபரான சாகில் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடிகை ரன்யா ராவ் கடந்த 5 மாதங்களில் 50 கிலோ தங்கம் கடத்தி இருப்பதையும், ரூ.35 கோடிக்கும் மேல் ஹவாலா பணம் துபாய்க்கு சென்றிருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டு நடிகர் தருண் ராஜு தரப்பில் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தங்கம் கடத்தல் வழக்கில் இன்னும் விசாரணை நிறைவு பெறாததால் தருண் ராஜுவுக்கு ஜாமீன் வழங்க வருவாய் நுண்ணறிவு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தருண் ராஜுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ், சாகில் ஜெயின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. அவர்கள் 2 பேரின் நீதிமன்ற காவலையும் வருகிற 21-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான 3 பேரும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
No comments