அதிமுக - பாஜக கூட்டணி ஏன்..... ஆடிட்டர் குருமூர்த்தியின் பேட்டி
சில நாட்களுக்கு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உறுதி செய்தார். முன்னதாக, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் அமித்ஷா சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்நிலையில், தனியார் டிவிக்கு குருமூர்த்தி அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் முடிவு செய்தது அமித்ஷாவின் திறமை. கூட்டணி அமைக்காமல் இருந்து இருந்தால், இந்த காலத்தில் கட்சி தேர்தலுக்கு தயார் செய்யப்பட்டு இருக்கும். தனியாக போட்டியிட்டால் , ஓட்டு சதவீதம் 12 சதவீதத்தில் இருந்து 24 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் தோற்போம். கட்சி வளரும். கட்சியை வளர்ப்பதா, தி.மு.க.,வை தோற்கடிப்பதா இது தான் பா.ஜ.,விற்கு உள்ள 'சாய்ஸ்'. ஆனால், அ.தி.மு.க., முன் உள்ள சாய்ஸ், யாருடன் சேர்ந்தால் தி.மு.க.,வை தோற்கடிப்போம் என்பது.
விஜய் கிடைக்கவில்லை என்பதால் பா.ஜ., உடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும். இதனால், சட்டென்று முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது.விஜய் கிடைத்து இருந்தால் பா.ஜ.,விடம் அ.தி.மு.க., வந்திருக்காது. இதில் சந்தேகம் கிடையாது. அ.தி.மு.க.,வின் முதல் தேர்வு விஜய் ஆகத் தான் இருந்து இருக்கும். என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால், அப்படி தோன்றுகிறது.விஜய், தி.மு.க.,வை தாக்கினார். அ.தி.மு.க.,வை தாக்கவில்லை. பிறகு, அ.தி.மு.க., உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வந்தது. தனிப்பட்ட முறையிலும் வந்தது. ஏதோ நடப்பதாக உணர முடிந்தது.
எதுவும் இயற்கையான கூட்டணியாக அமைய முடியாது. விஜய்க்கு 80 - 90 சீட் கொடுத்து இருந்தால், அ.தி.மு.க.,வில் பல பேருக்கு வேலை இருந்து இருக்காது. விஜய்க்கு துணை முதல்வர் என முதலில் பேசினர். அவருக்கு 90 சீட்டும், துணை முதல்வர் கொடுத்து இருந்தால், வேலுமணி, தங்கமணிக்கு என்ன வேலை? இ.பி.எஸ்., அதிகாரத்திற்கு பங்கம் வந்துவிடும்.
பிரபலமான தலைவர், வெளியில் போனால் 10 முதல் 20 ஆயிரம் பேர் வரக்கூடிய தலைவருக்கு துணை முதல்வர் என்றால், முதல்வருக்கு என்ன அதிகாரம் இருக்கும்? இவருக்கு கூட்டத்தை கூட்ட வேண்டும். இவருக்கு கூட்டம் கூடும்.இந்த கூட்டணிக்கு இயற்கை எனக்கூறுவதற்கு எந்த அளவு வாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு இயற்கைக்கு மாறானது எனக்கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments