ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு தொடர்வேன்..... மைத்துனரும் லாட்டரி மார்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் எச்சரிக்கை

 


விசிகவில் இருந்தபோதே விஜய்க்கு ஆதரவாக செயல்படுவதாக சர்ச்சையில் சிக்கி, கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தற்போது தவெகவில் இணைந்து திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறார். இந்நிலையில், அண்மையில் நடந்த அக்கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “ பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது” என பேசியிருந்தார்.இந்நிலையில் தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது தங்கை கணவர் ஆதவ் அர்ஜுனா குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் மோசமான கருத்துகளுக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதோடு, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தனது அரசியல் மற்றும் நிதி பேராசையை பூர்த்தி செய்ய, தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார்" என்ற அண்ணாமலையின் கூற்றையும் நான் ஆதரிக்கிறேன். ஆதவ் அர்ஜுனாவின் முட்டாள்தனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்” என ஜோஸ் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம். தொழில் முடிவுகளும் சரி, அரசியல் முடிவுகளும் சரி சுயமாக எடுக்கப்படுகின்றன. எனவே, இதற்கு எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் இருவரும் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நாங்கள் கொண்டுள்ள தனியுரிமையையும், கருத்துக்களையும் மதிக்கிறோம். எனவே, தவறான கூற்றுகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும். எங்கள் குடும்பத்தை தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று, வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதுதொடர்பான வழக்குகளை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக அண்மையில் கூட சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் தான், சகோதரியின் கணவருக்கு எதிராகவே, ஜோஸ் சார்லஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments