டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 1-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து டிஎஸ்பி ஆனந்தராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை -பஞ்சப்பள்ளி சாலையில் பேட்டராய சுவசாமி கோயில் அருகே எஸ்ஐ நாகராஜன் உள்ளிட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் போலீஸாரை கண்டதும் வேகமாக திரும்பி சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காரை துரத்தி சென்று காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, கடந்த 1-ம் தேதி திப்பசந்திரத்தில் உள்ள மதுக்கடையிலும் மற்றும் கடந்தாண்டு 14.09.24 அன்று இருதுகோட்டையில் உள்ள மதுபானக்கடையில் மதுபான கடைகளின் சுவற்றை துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்று குடியாத்தம் பகுதியில் வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (33), தீனா (24),பெல்லாரியை சேர்ந்த நாகராஜ் (24), காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த திருசபரி (25), சாப்ரனப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ் (20), ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் கரைபோலீஸார் பறிமுதல் செய்தனர்.
No comments