பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.42 கோடி
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருகை தரும் பக்தர்கள் அலகு குத்தி, முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும், கோவில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என பலர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உண்டியல் காணிக்கையில் ரூ. 5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 88 ரூபாயும், தங்கம் 1 ஆயிரத்து 131 கிராம், வெள்ளி 21 கிலோ 324 கிராம், 1 ஆயிரத்து 610 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளதாக பழனி முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments