மருதமலை முருகன் கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல தடை
கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து மண்டல பூஜை தொடங்கி உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.
இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை, வழிபாடு செய்யப்படுகிறது இந்த பூஜை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு என விஷேச நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை உள்ளதால் மருதமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை மலைப்பாதை வழியாக 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. 2 சக்கர வாகனங்கள் மூலமாகவும், படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் மூலம் இயக்கப்படும் பஸ்களிலும் கோவிலுக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
No comments