ராக்கெட் ராஜா உள்பட 3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய தடை
பிரபல ரவுடியான ராக்கெட் ராஜா உள்பட 3 ரவுடிகள் சென்னைக்குள் நுழைய காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். சென்னையில் ஆதாய கொலை, பழிவாங்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய ரவுடிகளை முன் கூட்டியே கண்டறிந்து அவர்கள் மீது காவல் ஆணையர் அருண் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி, பிரபல ரவுடிகளான திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த ராஜா என்ற ராக்கெட் ராஜா, குன்றத்தூரைச் சேர்ந்த லெனின் மற்றும் காஞ்சிபுரம் நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நெடுங்குன்றம் சூர்யா ஆகியோரை சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 51 ஏ-வின் படி வெளியேற்றுதல் ஆணையை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.இதையடுத்து, இவர்கள் சென்னை எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல்துறையினர் விசாரணை தொடர்பாகவோ இல்லாமல் வேறு எந்த ஒரு காரணத்துக் காகவும் ஒரு ஆண்டு காலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட் டுள்ளது.
உத்தரவை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.ரவுடி லெனின் மீது 6 கொலை, 12 கொலை முயற்சி உட்பட 28 குற்ற வழக்குகளும், நெடுங்குன்றம் சூர்யா மீது 5 கொலை, 12 கொலை முயற்சி உட்பட 64 குற்ற வழக்குகளும், ராக்கெட் ராஜா மீது 5 கொலை, 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 20 குற்ற வழக்குகள் உள்ளன.
No comments