திருச்சி விமான நிலையத்தில் 3 வாரத்தில் எக்ஸ்பிரஸ் கூரியர் சர்வீஸ் தொடக்கம்
திருச்சி சர்வதேச விமான நிலைய கார்கோ கூட்ட அரங்கில் ஏற்றுமதியாளர் நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் விமான நிலைய இயக்குநர் ஞானேஸ்வர ராவ் தலைமையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது, விமான நிலையத்தில் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள குறைபாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் விளக்கினர்.மேலும், சுங்கத் துறை அதிகாரிகளின் அணுகுமுறை மற்றும் அவர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் நெருக்கடிகள் உள்ளிட்டவற்றை சீரமைத்து கொடுத்தால், தினமும் 100 டன்னுக்கும் அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் விமான நிலையத்துக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு விமான நிலைய இயக்குநர் ஞானேஸ்வர் ராவ் செய்தியாளர்களிடம் கூறியது:
விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த எக்ஸ்பிரஸ் கூரியர் சர்வீஸ் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதுகுறித்து டெல்லி தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்து, உரிய அனுமதி பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் கார்கோ முனையத்தில் போதிய வசதிகள் உள்ளன. ஏற்கெனவே திருச்சியிலிருந்து கொச்சின், ஹைதராபாத் போன்ற விமான நிலையங்கள் மூலம் தங்களுடைய பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் ஏற்றுமதி நிறுவனங்கள், இனிமேல் திருச்சியில் இருந்து அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments