17 மாதமாக வாடகை கொடுக்காத சார்பதிவாளர் அலுவலகம்..... பூட்டு போட்ட கட்டிட உரிமையாளர்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலகேட் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்பதால், இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இதனால், சார் பதிவாளர் அலுவலகம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள கந்தசாமி என்பவரின் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு, கடந்த 12.09.2023 முதல் இயங்கி வருகிறது.
அப்போது கந்தசாமியிடம் சார் பதிவாளர் சார்பில் மாத வாடகையாக ரூ.18,780 வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வாடகை தொகை கடந்த 17 மாத காலமாக வழங்கப்படவில்லை. இதற்கிடையே, புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடப்பணி நிறைவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாடகை பாக்கி குறித்து கந்தசாமி கடந்த 3-ம் தேதி கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை. சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி மாலை பணி முடிநத்ததும் வெளிக்கதவை பூட்டுப் போட்டு பூட்டி விட்டு அலுவலர்கள் சென்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் காலை கட்டிட உரிமையாளர் கந்தசாமி, சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, தான் கொண்டு வந்திருந்த பூட்டை போட்டு பூட்டினார்.இந்நிலையில் காலை 9.30 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த பணியாளர்கள் பூட்டு போட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தொடர்ந்து, மாவட்ட பதிவாளர் நேரில் வந்து கந்தசாமியிடம் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அவர் பூட்டை அகற்றினார். அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் விரைவில், கட்டிடத்துக்கான வாடகை பணம் முழுமையாக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை பத்திரப்பதிவு தாமதமாக தொடங்கியது.
No comments