தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால் தேர்வெழுத அனுமதிக்கப்படாத அரசு பள்ளி 10-ம் வகுப்பு மாணவர்கள்


 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு திருகாம்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 43 மாணவர்கள் பயின்றனர். இவர்களுக்கு மாயனூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப் பட்டிருந்தது. மார்ச் 28-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், ஒரு மாணவர் பள்ளிக்கே வரவில்லை என்பதால் அவர் தேர்வில் பங்கேற்கவில்லை. எஞ்சிய 42 பேரின் தேர்வு கூட நுழைவுச்சீட்டு மாயனூர் அரசு மாதிரிப் பள்ளி மையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், 42 பேரில் பிரதீப், சாரதி ஆகியோர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை, படிப்பதில்லை என்றும், அவர்கள் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாவிட்டால், பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறையும் எனவும் கருதி, அவர்களை தேர்வெழுத வேண்டாம் என தலைமை ஆசிரியர் அறிவுறுத்திய தாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் 2 பேரும் தமிழ்த் தேர்வை எழுதவில்லை.

இந்நிலையில், தேர்வு மையத்தில் இருந்த ஆசிரியர்கள், 2 பேரும் தேர்வுக்கு வராதது குறித்து சக மாணவர்களிடம் கேட்டு, 2 பேரையும் ஆங்கிலத் தேர்வெழுத அழைத்து வருமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிரவீண், சாரதி ஆகியோர் நேற்று ஆங்கிலத் தேர்வெழுத வந்துள்ளனர்.இதுகுறித்து அறிந்த மேட்டு திருகாம்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் சாந்தா, தற்போது தேர்வெழுதினால் தேர்ச்சி பெற மாட்டீர்கள் என்றும், அடுத்தமுறை தேர்வெழுதிக் கொள்ளுமாறும் கூறி, 2 பேரையும் அழைத்துக் கொண்டு, அவர்கள் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்து விட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்காத பெற்ரோர், 2 பேரையும் மீண்டும் தேர்வு மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், அவரது அனுமதியின்பேரில் 2 பேரும் காலை 11.45 மணிக்கு மேல் ஆங்கிலத் தேர்வை எழுதினர். 2 பேருக்கும் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments