இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த மின்துறை அதிகாரியை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பி மின்துறை அதிகாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இளம்பெண் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அந்த இளம்பெண் அவரை உல்லாசமாக இருக்கலாம் என அழைத்துள்ளார். அந்த அதிகாரியும் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டு மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த வாரம் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.இதை திட்டமிட்டு ரகசியமாக வீடியோ படம் எடுத்த ஒரு கும்பல் அதை கடந்த சில நாட்களுக்கு முன் மின் அதிகாரிக்கு அனுப்பி உள்ளனர். இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ விட்டு விடுவோம் என மிரட்டி அவரிடம் ரூ.10 லட்சத்தை பறித்துள்ளனர்.
அதன்பின் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பணம் கேட்டு மீண்டும் மிரட்டினர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசில் மின் அதிகாரி அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அந்த அதிகாரியை மிரட்டியது வாணரப்பேட்டையை சேர்ந்த ரவுடி தீனா என்ற தீனதயாளன் (வயது 29), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஷாருகான் (25), பெரம்பையை சேர்ந்த சுகந்தி (28), அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிமேகலை (40), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சுலோச்சனா என்ற அம்மு (32) என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மின்துறை அதிகாரியின் சபலத்தை பயன்படுத்தி அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி ரங்கராஜன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments