IPL 2025: ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா..? வெளியான தகவல்

 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியில் காயத்தை சந்தித்த அவர், அதிலிருந்து மீளாததால் சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்கவில்லை. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை நேரில் கண்டு களித்ததுடன், சக வீரர்களையும் உற்சாகப்படுத்தினார்.

தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் பெங்களூருவில் பி.சி.சி.ஐ.யின் மருத்துவக்குழுவின் கண்காணிப்பின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவர் இன்னும் முழு உடற் தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் வருகிற 22-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகளை பும்ரா தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில்தான் இவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து மும்பை அணியுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மும்பை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஐ.பி.எல். நிறைவடைந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கு பும்ரா முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியம். எனவே பும்ரா 100 சதவீத உடற்தகுதியை எட்டினால் மட்டுமே அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாட பி.சி.சி.ஐ. அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதிக்கு முன் பும்ரா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரலாகியது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளதாக வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி நாளை நியூசிலாந்துடன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது.

Post a Comment

0 Comments