IPL 2025: வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட பிசிசிஐ
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
முன்னதாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இதனால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ. விதித்தது.
அந்த வகையில் தற்போது ஐ.பி.எல். தொடரிலும் வீரர்களுக்காக புதிய கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி,
*பயிற்சிக்கு செல்லும்போது வீரர்கள் தங்களது அணியின் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டும் என்றும் தனியாக பிரத்யேகமாக வாகனங்களை கொண்டு வந்து அதில் பயணிக்கக்கூடாது.
*பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் உறவினர்கள் ஓய்வறைக்கு வரக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அணியின் உரிமையாளர்கள் கூட வீரர்களின் ஓய்வறைக்கு செல்ல தடை.
* மைதானத்தில் வீரர்கள் பயிற்சிக்கு வரும்போது உரிய அங்கீகார அட்டை கொண்டு வர வேண்டும். அப்படி எடுத்து வர மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
* பரிசளிப்பு நிகழ்வின்போது வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்சி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments