வாடகை BMW காரில் அலப்பறை செய்த 10 ஆம் வகுப்பு மாணவர்கள்
கேரளா மாநிலத்தில் உள்ள கொன்னி பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அன்று பள்ளிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல் வந்தனர். அப்போது பள்ளி வளாகத்துக்குள் பிஎம்டபிள்யூ கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது. புழுதியை கிளப்பிய படி, ஹாரனை தொடர்ந்து அடித்து இப்படி பள்ளி வளாகத்திற்குள் சுற்றி வந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின் அந்தக் கார் வயல் வலியை நோக்கி சென்றது. அப்போது பள்ளியின் கேட்டை ஆசிரியர்கள் மூடினர். இதனால் அந்த கார் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற முடியவில்லை. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் காரை பறிமுதல் செய்தனர். அதோடு ஜோஸ் அஜி(19) மற்றும் ஜுவல் தாமஸ்(19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில் இந்த காரை அங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் பிரியாவிடை நிகழ்வு கொண்டாடுவதற்காக ரூ.2000-த்திற்கு எடுத்திருப்பதாகவும், அதனை கொண்டாடுவதற்காக அந்த காரை அங்கு கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அந்த காரில் குழு புகைப்படம் எடுக்கவும், காரில் நண்பர்களாக இணைந்து செல்வதற்கும் அவர்கள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
No comments