• Breaking News

    கணவர் அடிக்கடி கைது..... காதல் திருமணம் செய்த பெண் காவலர் தற்கொலை

     


    சென்னை மாவட்டம் புளியந்தோப்பில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை போலீசாரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த செல்வி (வயது 39) கடந்த 21-ஆம் தேதி நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு திரும்பவில்லை. 

    இதனால் போலீசார் வீட்டிக்கு சென்று பார்த்தனர்.செல்வி வீட்டின் கதவு உள்ளே இருந்து பூட்டியிருப்பதும், தட்டியும் திறக்காத நிலையில், புளியந்தோப்பு போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, இது தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, தனது உறவினரான நல்லுசாமியை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். பின்னர் 2008ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த செல்வி, சிவகங்கை, தேவக்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய பின் சென்னைக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆனால் அவரது கணவர் நல்லுசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையிலிருந்ததுடன், ஏ பிளஸ் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார்.

    அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்பட்டும், சிறை அனுப்பப்பட்டும் வந்த நல்லுசாமி கடந்த ஜனவரியில் வாரண்ட் வழக்கில் மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது சிவகங்கையில் வசித்து வந்தார். சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் நல்லுசாமிக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, செல்வி மற்றும் நல்லுசாமி இடையே தொலைபேசி வழியாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கணவரின் செயல்பாடுகளால் மன உளைச்சலில் இருந்த நிலையில் செல்வி தற்கொலை செய்துக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    No comments