• Breaking News

    இன்று ஒரு நாள் அதிமுக எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட்

     


    தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரமும், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதமும் நடந்து வருகிறது. அப்போது மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் அவையின் மரபின்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என பதில் தெரிவித்தார். தொடர்ந்து முன் அனுமதி பெற்றே பேச வேண்டும் என கடந்த ஆட்சியில் சபாநாயகர் தனபால் கூறியதே, இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சபாநாயகரை கை நீட்டி பேசுவது மரபல்ல... நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். தயாராக உள்ளேன். டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனக் கூற மாட்டேன். ஆனால், மரபை பின்பற்றுங்கள் என கூறினார்.

    இதனை தொடர்ந்து பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்து அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டபின் அவர்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

    No comments