• Breaking News

    தங்கம் விலை நிலவரம் போல தமிழகத்தில் தினமும் கொலை நிலவரம்..... எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு


     தமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்களைக் கண்டித்தும், பேச அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தது. அதன்பிறகு, இ.பி.எஸ்., செய்தியாளர்களிடம் பேசினார்.

    அவர் கூறியதாவது; இந்த அரசையும், காவல்துறையையும் நம்பி மக்கள் எப்படி வெளியே வர முடியும். மக்களை காப்பாற்றத் தான் முதல்வர் இருக்கிறார். ஒப்பிட்டு பேசுவது முறையல்ல. குற்றம் நடக்காமல் பார்ப்பது தான் அரசின் கடமை. எதிர்க்கட்சி என்ற முறையில் குறைகளை சுட்டிக்காட்டுவோம். தங்கம் நிலவரத்தைப் போல கொலை நிலவரம் எப்படி இருக்கிறது என்ற அவலநிலை இனி இருக்கக் கூடாது, எனக் கூறினார்.

    அப்போது, பதிலுக்கு பயந்து அவையை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதனால், கடுப்பாகி பதிலளித்த இ.பி.எஸ்., 'என்ன பதிலை கிழித்து விட்டாரு இவரு. சொல்லுங்க பார்க்கலாம். ஏங்க, இது வெட்கக்கேடா இருக்கு. இதையொரு கேள்வி என்று நீங்க கேட்கறீங்க. இவ்வளவு நடந்திருக்கு, தனிப்பட்ட முறையில் என்று சொல்கிறார். வருடம் முழுவதும் தான் இதை சொல்லிட்டு இருக்கிறார். இதைக் கேட்க நாங்க உள்ளே உட்கார்ந்திட்டு இருக்க வேண்டுமா? இதை தடுத்து நிறுத்த என்ன பதில் என்று சொல்லு, கேட்கலாம். அதை விட்டு விட்டு, நாங்கள் குற்றவாளிகளை கைது செய்கிறோம். இது எல்லா ஆட்சியிலும் தான் செய்கிறார்கள். இதற்கு எதுக்கு நீங்கள் முதல்வராக இருக்கிறீர்கள்?

    எங்களை பேச அனுமதிக்காத காரணத்தினால் தான் வெளிநடப்பு செய்தோம். நாட்டில் நிலவும் பிரச்னையை எடுத்து சொன்னால், இந்த அரசாங்கம் காலியாகி விடும். அதனால், தான் பயந்து கொண்டு, எங்களை பேச அனுமதிக்க மறுக்கிறார்கள்,' எனக் கூறினார்.

    தொடர்ந்து, தொகுதி மறுவரையறை குறித்து எழுப்பிய கேள்விக்கு, ' அனைத்து கட்சிகளையும் இங்கு அழைத்து பேசுவதற்கு பதிலாக, பார்லிமென்டில் குரல் கொடுக்க வேண்டும். தி.மு.க.,வுடன் இண்டி கூட்டணியில் இருந்தவர்கள் எல்லாம் பார்லிமென்டில் குரல் கொடுக்கவில்லையே. இங்கே பேசி என்ன பயன். இது எல்லாம் விளம்பரம். விளம்பரத்தினால் தான் வண்டி ஓடுகிறது. இங்கே தி.மு.க., கூட்டத்தில் பங்கேற்க வரும் காங்கிரஸ், ஏன் உரிய பதிலை கொடுக்கவில்லை. இது எல்லாம் நாட்டு மக்களுக்கு ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள்.

    கொலை, ஊழல் நடக்கிறது. அமலாக்கத்துறை மிகப்பெரிய ஊழலை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார்கள். நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு போட்டார்கள். நீதிமன்றத்திற்கு சென்று நிரபராதி என்று வெளியே வந்தேன். நீங்களும் நீதிமன்றம் செல்லுங்கள், நிரபராதி என்று நிரூபியுங்கள்.

    அதிகாரத்தை பயன்படுத்தி, எங்களைக் கேட்டு தான் உள்ளே வரணும், எங்களைக் கேட்டு தான் கொடுக்கணும், அப்படி சொல்லும் போது, இதில் தவறு நடந்திருப்பது உறுதியாகிறது. இந்த வழக்கின் முழு விசாரணை நடக்கும் போது, யார் உள்ளே இருப்பார், யார் வெளியே இருப்பார் என்பது தெரிய வரும், எனக் கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது; பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்டராங், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் என படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசியல் கட்சி தலைவர் முதல் சிறுமி, மூதாட்டி வரை பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

    No comments