நாகை: காணாமல் போன ஆடு..... கசாப்பு கடையில் இருந்த தலையை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்ற பெண்

 


நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்த பூங்கொடி என்ற 31 வயது பெண்மணி, தனது காணாமல் போன ஆட்டினை தேடி கசாப்புக் கடைக்கே சென்று, வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த பூங்கொடியின் ஆடு சமீபத்தில் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் எங்கு காணவில்லை. இதனால் யாரோ திருடி விட்டார்களென்று எண்ணிய பூங்கொடி, சந்தையில் கசாப்புக்கடைகளை தேடி சென்றார்.

அப்போது நாகை அருகே உள்ள கல்லார் பகுதியில் உள்ள ஒரு ஆட்டிறைச்சிக் கடையில், தனது ஆட்டின் வெட்டப்பட்ட தலையையும் உடலையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்காரரான செய்யது அகமதுவிடம் இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, பூங்கொடியை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆட்டின் தலையை கைப்பற்றி எடுத்துக்கொண்டு, பூங்கொடி நேரடியாக நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

பூங்கொடி கையில் ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் வந்ததை பார்த்த போலீசார் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் வழக்குப் பதிவு செய்து, கசாப்புக்கடைக்காரர் செய்யது அகமதுவை கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments