தவறான சிகிச்சையால் குழந்தை பெற்றெடுத்த தாய் உயிரிழப்பு..? தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் இளமுருகன். இவரது மனைவி தனுசுவள்ளி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனுசு வள்ளிக்கு கடந்த 9-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தனுசுவள்ளி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து சுயநினைவை இழந்தார்.
இதனை பார்த்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தனுசு வள்ளியின் உடல்நலம் மோசமாக உள்ளது. அவரை திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறிய ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தனுசு வள்ளியை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவரது மூளை செயல் இழந்துவிட்டது என கூறி வாரத்திற்கு மேல் சிகிச்சை அளித்துள்ளனர்.
இதனால் பல லட்ச ரூபாய் செலவானது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனுசு வள்ளியை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுசுவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் இழைக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் தனுசு வள்ளி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments