நாகை ஆண்டவர் நர்சிங் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு உணவு வழங்க ரேசன் பொருட்கள் கடத்தல்..... கையும் களவுமாக சிக்கிய லாரி ஓட்டுநர்...... கல்லூரி தாளாளர், ரேஷன் கடை உதவியாளருக்கு போலீசார் வலை வீச்சு
நாகப்பட்டினத்தில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து தனியார் கல்லூரிகளுக்கு ரேசன் பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் ஆகியவை கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ரகசிய தகவல் வந்தது அதனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் புலனாய்வு குழுவினர் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை அருகே கீச்சாங்குப்பம் சேவாபாரதி நகர் மீனவர் நியாயவிலைக்கடையின் முன்பு மினிலோடு லாரி ரேசன் அரிசி ஏற்றியவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் ரேசன் அரிசி ஏற்றுவதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் சந்தேகம் அடைந்த குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் சந்தேகம் அடைந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் நாகப்பட்டினத்தில் உள்ள ரேசன் கடைகளில் ரேசன் அரிசி, கோதுமை, பாமாயில் ஆகியவற்றை வாங்கி சென்று நாகப்பட்டினம் அருகே பொரவச்சேரியில் உள்ள ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் கொடுப்பதாக கூறினார். இதையடுத்து மினிலோடு லாரியில் இருந்த 50 கிலோ எடைகொண்ட ரேசன் அரிசி 25 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
![]() |
கல்லூரியின் தாளாளர் தமிழ்ச்செல்வி |
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலோடு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி ஓட்டுநர் சுந்தர், ரேசன் கடை விற்பனையாளர் ராவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் தனியார் கல்லூரியில் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டை ரேசன் அரிசி, 8 மூட்டை ரேசன் கோதுமை, 3 மூட்டை ரேசன் பருப்பு என மொத்தமாக 55 மூட்டைகளில் 2ஆயிரத்து 700 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி, 8 மூட்டைகளில் 400 கிலோ ரேசன் கோதுமை, 3 மூட்டைகளில் 150 கிலோ ரேசன் பருப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு விடுதியில் உணவு தயார் செய்து வழங்க ரேசன் கடைகளில் குறைவான விலைக்கு ரேசன் பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மேலும் தப்பிய ரேசன் கடை உதவியாளர் ஆறுமுகம், ஆண்டவர் நர்சிங் கல்லூரியின் தாளாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகை: செய்தியாளர் ஜி.சக்ரவர்த்தி
No comments