சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 2025 ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் மூன்று விக்கெட்டுகளை சாய்த்து மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் திணறினர். இதை எடுத்து யார் இந்த விக்னேஷ் புத்தூர்? என்ற ரசிகர்கள் தேடத் துவங்கினர்.
விக்னேஷ் புத்தூர் 24 வயதான இடது கை லெக் ஸ்பின்னர் ஆவார். இவர் கேரளாவின் மலப்புறம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் மிகச் சில தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலேயே விளையாடியிருக்கிறார். இன்னும் மாநில அணிக்காக கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவர் அண்டர் 14 மற்றும் அண்டர் 19 அளவிலேயே கேரளாவுக்காக ஆடினார். அதன் பின் கேரளா கிரிக்கெட் லீக் எனும் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டும் ஆடி இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சில போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் அவர் முதலில் மிதவேக பந்துவீச்சாளராகவும், சாதாரண சுழற் பந்துவீச்சாளராகவும் இருந்தார். அதன் பின்னர் லெக் ஸ்பின்னராக மாறினார். அவருக்கு இன்னும் "சைனா மேன் பௌலிங்" எப்படி வீசுவது என்பதும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் முழுமை பெறாத ஒரு லெக் ஸ்பின்னர் தான் விக்னேஷ் புத்தூர். ஆனால், அவர் வேகமாக கற்றுக் கொண்டு வருவதாலும், தனித்துவமான முறையில் பந்து வீசுவதாலும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அவரை இம்பாக்ட் வீரராக தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. முதல் ஏழு ஓவர்களில் சிஎஸ்கே அணி அதிரடியாக ஆடி ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.
8வது ஓவரில் விக்னேஷ் புத்தூர் பந்து வீச வந்தார். அவர் அரை சதம் அடித்திருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை அந்த ஓவரில் வீழ்த்தினார்.அடுத்து 10வது ஓவரில் சிவம் துபே விக்கெட்டையும், 12 வது ஓவரில் தீபக் ஹூடா விக்கெட்டையும் வீழ்த்தினார். இதை எடுத்து சிஎஸ்கே அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறத் தொடங்கியது.
விக்னேஷ் புத்தூர் தான் வீசிய முதல் மூன்று ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். அதிக அனுபவம் இல்லாத, முழுமை பெறாத ஒரு பந்துவீச்சாளரிடம் சிஎஸ்கே அணி தடுமாறியது மிகப்பெரும் வியப்பை ஏற்படுத்தியது.விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார் ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவரது தாயார் கே.பி. பிந்து ஒரு இல்லத்தரசி ஆவார். நிதிச் சிக்கல்கள் இருந்தபோதிலும், அவரது பெற்றோர் அவரது கிரிக்கெட் ஆர்வத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தற்போது பெரிந்தல்மன்னாவில் உள்ள பிடிஎம் அரசு கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார் விக்னேஷ் புத்தூர். தற்போது சமூக வலைதளங்களில் சிஎஸ்கே அணி வெற்றியை விட மும்பை அணியின் இந்த இளம் வீரர் டிரெண்டிங் ஆகி வருகிறார்.
0 Comments