• Breaking News

    சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு

     


    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஓய்வு பெற்ற காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் அவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு தமிழக முதல்வர் பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில், ‘மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விதி 55-ன்கீழ், திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.இதிலே பல்வேறு உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் தங்களது பெயர்களைக் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள். அவர்களை மட்டும் இங்கே பேச அனுமதிக்காமல், இதிலே கவன ஈர்ப்பு கொடுக்காதவர்களும் பேசியிருக்கிறார்கள் என்றால், இதில் இந்த அரசு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

    நீங்கள் எப்படி இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தங்களுடைய பெயர்கள் இடம் பெறவேண்டுமென்று கருதி, பேசி இடம் பெற்றிருக்கிறீர்களோ, அதைப்போல், இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், அதே அக்கறையோடு நிச்சயமாக சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையில் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திருநெல்வேலி மாநகரம் மூர்த்தி ஜஹான் தைக்கா தெரு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் என்பவர் நேற்று அதிகாலை திருநெல்வேலி மாநகர தெற்கு மவுண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சில நபர்கள் வழி மறித்து தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

     ஜாகீர் உசேன் அவர்களின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக திருநெல்வேலி தொட்டி பாலத் தெருவைச் சேர்ந்த இருவர் திருநெல்வேலி குற்றவியல் நடுவர்-4 நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மற்ற எதிரிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட ஜாகீர் உசேன் கடந்த 08.01.2025 அன்று அவரது முகநூல் பக்கத்தில் ஒரு காணொலி வெளியிட்டுள்ளது பற்றியும், அதில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    No comments