கிராம நத்தம் நிலங்களில் வசிப்பவர்கள் பட்டா கேட்டால் மறுக்க முடியாது..... ஐகோர்ட் விளக்கம்
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மருதமுத்து, ராஜேந்திரன், சுப்பிரமணியன் கிராம நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க கோரி விண்ணப்பித்தனர்.
3 சென்ட்டுக்கு மேல் உள்ள நிலத்துக்கு, பட்டா வழங்க முடியாது என தாசில்தார் விண்ணப்பங்களை நிராகரித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 'கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு 1905 ஆண்டு நில ஆக்கிரமிப்பு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே யாரும் அந்த நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாட முடியாது' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சட்டத்தின் கீழ், அரசின் அதிகாரம் என்பது, நில வருவாய் நிலுவைத் தொகையை வசூலிப்பதை தவிர, அதற்கு மேல் எதுவும் இல்லை என, கடந்த 1903ம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழுமையான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
நிலம் கிராம நத்தமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினாலோ அல்லது உச்சவரம்புகளை மேற்கோள் காட்டியோ, பட்டா கோரும் நபர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டியதில்லை.
தனி நபர்கள் பட்டா கோரும் போது, அதில் குடியிருக்கின்றனரா அல்லது காலி நிலமா என்பதை மட்டுமே பரிசீலிக்க வேண்டும். கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால், அந்த நிலம் அரசுக்கு சொந்தம். ஆக்கிரமிப்புகள் இருந்தால் அரசு அகற்றலாம். இது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர், நான்கு வாரங்களில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments