• Breaking News

    கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் எழுந்து சென்ற வாலிபரால் பரபரப்பு



     மத்தியப்பிரதேச மாநிலத்தில் கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நபர், தமது உடலுக்கு ஒன்றும் இல்லை என்று கூறி சாவகாசமாக எழுந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

    இதுபற்றிய விவரம் வருமாறு;

    மத்தியபிரதேசத்தில் ரத்லம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீனதயாள் நகரைச் சேர்ந்த பன்டி நினாமா என்ற வாலிபர் அனுமதிக்கப்பட்டார். சண்டையின் போது அவர் காயம் அடைந்துவிட்டதாக கூறி உறவினர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

    அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசம் அடைந்துவிட்டதாகவும், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சையும் அளித்து வந்துள்ளனர்.ஆபத்தான கட்டத்தில் உள்ளதால், மருத்துவ சிகிச்சைக்கு நிறைய பணம் செலவாகும். உடனடியாக ரூ.1 லட்சத்தை மருத்துவமனையில் செலுத்திவிட வேண்டும் என்று அவரது உறவினர்களுக்கு மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் விரைவாக பணத்தை கட்டிவிட வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

    இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கே, இங்கே என்று கடன் வாங்கி, மருத்துவமனை கூறிய பணத்தை தயார் செய்து கொண்டிருக்கும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பன்டி நினாமா சாவகாசமாய் எழுந்து வெகு இயல்பாய் நடந்து வந்துள்ளார்.

    உயிருக்கு போராடுகிறார் என்று மருத்துவர்கள் சொல்லிய நிலையில் மருத்துவமனை அறையில் இருந்து சாதாரணமாக அவர் நடந்து வெளியே வந்தது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பன்டி நினாமா கூறியதாவது; ஐந்து மருத்துவமனை ஊழியர்கள் என்னை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளேன். அவர்கள் எனது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர் என்றார்.

    மருத்துவமனையில் இந்த மோசடி பற்றிய விவரம் இணையதளத்தில் வெளியாக பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

    No comments