தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக இதே கூட்டணியுடன் அடுத்து வரும் 2026 தேர்தலிலும் களம் காண இருக்கிறது. அதன் பிறகு பாஜக, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் தொடர்பான கூட்டணி வியூகங்களை அமைத்து வருகிறது. குறிப்பாக பாஜக திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், அதிமுக மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி பார்த்தால் பாஜக, அதிமுக, பாமக மற்றும் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்பது ராஜ்யசபா சீட் கொடுப்பதை பொறுத்து தான் அமையும்.இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இன்னும் ஆறு மாதத்திற்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் நேற்று டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு பற்றி அவர் கூறும் போது டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட சென்றதாகவும் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார்.
ஆனால் உள்துறை மந்திரி அமித்ஷா இபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும் என்பது உறுதியாகி உள்ளது.
0 Comments