• Breaking News

    புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை..... கல் குவாரி உரிமையாளர் மனைவி மீதும் வழக்குப் பதிவு.....


     புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றதால் ஜன.17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துளையானூரில் கல் குவாரி நடத்திவந்த ராமையா, ராசு உட்பட 5 பேரை திருமயம் போலீஸார் கைது செய்தனர். 

    இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தவறியதாக திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு, காவல் ஆய்வாளராக புதுக்கோட்டை நகரில் பணிபுரிந்த மருது, வட்டாட்சியராக ராமசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து, சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கிரஷர் குவாரியை புதுக்கோட்டை கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, வட்டாட்சியர் ராமசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்து சீல் வைத்தனர். அப்போது, துளையானூரில் கைது செய்யப்பட்டுள்ள குவாரி உரிமையாளரான ராமையாவின் மனைவி அழகு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக 16 யூனிட் ஜல்லி, 272 யூனிட் எம்-சாண்ட் குவித்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வட்டாட்சியர் ராமசாமி அளித்த புகாரின்பேரில், அழகு மீது திருமயம் போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    No comments