திருக்குவளை அருகே சிபிஐ சார்பில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சொந்த பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் மத்திய அரசு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிபிஐ சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்க உள்ள அடையான அட்டை பெறுவதற்கு சொந்த பட்டா நிலம் வைத்திருக்க வேண்டுமென்ற அறிவிப்பு நடைமுறையில் உள்ளது.நாகை மாவட்டத்தை பொருத்தவரை ஏறக்குறைய சுமார் 60% மேல் சாகுபடி நிலம் கோயில் மற்றும் மடத்திற்கு சொந்தமான பட்டா நிலமாக உள்ளது. இதனை விவசாயிகள் குத்தகை தொகை செலுத்தி பல ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் சொந்த பட்டா உள்ள விவசாயிகளுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கும் பட்சத்தில் மீதம் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கான சலுகையை பெற முடியாத நிலை எதிர் காலத்தில் ஏற்படும்.
அதனால் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும். பட்டா நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் அடையாள அட்டை என்று நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஐ சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் டி. செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றக் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் எட்டுக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அரசு புறம்போக்கு நிலத்தை அளந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
No comments