இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூமை திறக்கும் டெஸ்லா
சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி எலான் மஸ்க்கை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். ஏற்கனவே இந்தியாவின் வரி விதிப்பு முறை குறித்து கவலை தெரிவித்த எலான் மஸ்க் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிட்டத்தட்ட 100 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது நியாயமற்றது என கூறி இருந்தார்.இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்தது.
இதனால், இந்தியாவில் களமிறங்க எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது என பேசப்பட்டது. இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பாக டெஸ்லா வெளியிட்ட விளம்பரத்தில் 13 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது.இந்தியாவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கியிருப்பதன் மூலம் டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, டெஸ்லா நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்குவது நியாயமாக இருக்காது. இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தால் அது அநீதியானது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அமெரிக்காவை பயன்படுத்திக் கொள்கிறது. என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூமை மும்பையின் பாண்ட்ரா குர்லா வளாகத்தில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திறக்கிறது. மொத்தம் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்திற்கு மாதம் ரூ.35 லட்சம் வாடகை செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டில்லியின் 2வது ஏரோ சிட்டி வளாகத்தில் டெஸ்லா 2வது ஷோரூமை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments