• Breaking News

    தேவகோட்டை: அதிமுக கவுன்சிலர் உட்பட 8 பேரை ஒரே நாளில் கடித்த வெறிநாய்

     


    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே நேற்று காலை நடந்து சென்றோர், இருசக்கர வாகனங்களில் சென்றோரை வெறிநாய் விரட்டி கடித்தது. இதில் அதிமுக நகராட்சி கவுன்சிலர் முத்தழகு (55) மற்றும் வினோத்குமார் (19), அர்ஜூனன் (55), அன்பரசன் (52), வீரசேகரன் (43), நிகேதன் (23), பகுருதீன் (60), விஜயா (38) ஆகிய 8 பேர் காயமடைந்தனர்.

    அவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அந்த நாயை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதேபோல், சிங்கம்புணரி பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் வெறிநாய் கடித்த 14 கோயில் மாடுகள் வெறிநோய் பாதிப்பால் உயிரிழந்தன. இதையடுத்து வெறிநோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்ட மாடுகளுக்கு நேற்று முன்தினம் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராமச்சந்திரன் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கருத்தடை செய்யப்பட்டு வந்தன. 

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் நாய்களுக்கு கருத்தடை செய்வதில்லை.இதனால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, வெறிநோய் பாதித்த நாய்களும் அதிகளவில் திரிகின்றன. கடந்த காலங்களில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கங்கள் செயல்பட்டு வந்தன. அவற்றின் மூலம் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளிப்பது, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நாய்களுக்கு கருத்தடை செய்வது, சாலைகளில் திரியும் மாடுகளை பிடிப்பது போன்ற பணிகள் நடைபெற்றன.

     தற்போது அந்த சங்கங்கள் செயல்பாட்டில் இல்லாததால் நாய்களை கட்டுப்படுத்தும் பணி முடங்கியுள்ளது. இதனால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

    No comments