• Breaking News

    கோவை: ஊசி மூலம் உடம்பில் போதைப்பொருள்.... 8 பேர் கைது

     


    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில், ஒரு கும்பல் போதை ஊசிகள் பயன்படுத்தி வந்தது குறித்து நகர மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, போதைப்பொருள் எடுத்துக்கொண்டு இருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். சிலர் நேராக சாக்கடை கால்வாயில் குதித்து ஓட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவர்கள்  அனைவரையும்  விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்தவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இமாம் அலி (39), ஷேக் பரீத் (23), சலீம் (23), நந்தகுமார் (22), பாவா இப்ராகிம் (35), முஸ்தபா (25), முகமது அலி (37), ரத்தினகுமார் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து போதைப்பொருள் ஊசிகள் மற்றும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பல்லடத்தை சேர்ந்த முரளி என்பவர் இவர்களுக்கு போதைப்பொருட்களை வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

    போலீசார் தேடுவதை அறிந்ததும், முரளி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, தனிப்படை போலீசார் அவரை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர். முரளி கைது செய்யப்பட்டால், போதைப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது, வேறு யாரெல்லாம் இதில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பது தெரிய வரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    No comments