• Breaking News

    கடலூர்: சிறுமிகளை கடத்தி பாலியல் தொழில் நடத்திய தம்பதி 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது

     


    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 14 வயது மற்றும் 13 வயதுடைய பள்ளி மாணவிகள் இருவரை, கடந்த 2014ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தைச் சதீஷ்குமார் (39), அவரது மனைவி தமிழரசி (39) ஆகியோர் கடத்தி சென்றனர். அவர்களை திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அங்குள்ள புரோக்கர்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். 

    இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு மாணவிகள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். அப்போது மாணவிகள் இருவரும் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பெற்றாரிடம் கூறி அழுதனர்.அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், இது குறித்து திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2016-ம் ஆண்டு இவ்வழக்கு கடலூர் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. 

    இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சதீஷ்குமார், தமிழரசி ஆகியோர் 2018ம் ஆண்டு தலைமறைவாகிவிட்டனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில் குமார் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு ஜனவரி 4ம் தேதி அன்று இவ்வழக்கில் தொடர்புடைய 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய சதீஷ்குமார், தமிழரசி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். 

    சதீஷ் குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது.இதையடுத்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சென்ற சிபிசிஐடி போலீஸார் அங்கு சதீஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையில் வீட்டு வேலை செய்து அங்கேயே தங்கி இருந்த தமிழரசியையும் போலீஸார் கைது செய்து கடலூர் அழைத்து வந்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    No comments